
Picture : Awani
கோலாலம்பூர், அக்டோபர் 1 – மலாயா பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் மாணவர் குடியிருப்புத் திட்டம், எதிர்காலத்தில் 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தங்குமிட வசதியை வழங்கும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக அவர் கூறினார். பொதுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கான தங்குமிட வசதிகளை விரைவாக அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில், இந்தத் திட்டமும் ஒன்றாகும் என ஸாம்ப்ரி தெரிவித்தார்.
மாணவர்களின் தங்குமிடத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார். மலாயா பல்கலைக்கழகத்தில் இந்தத் திட்டம் கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் மொத்தம் 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் தங்குமிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, குறிப்பாக பி40 பிரிவினருக்கு தங்குமிட வசதியில் முன்னுரிமை வழங்கப்படும் என ஸாம்ப்ரி கூறினார். தொலைதூரப் பகுதிகளில் இருந்து கல்வி கற்க வரும், தனியாக தங்குமிடத்தை ஏற்பாடு செய்யும் பொருளாதார வசதி இல்லாத மாணவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
மாணவர் குடியிருப்பு வசதிகளை அமைப்பதன் முக்கிய நோக்கம் வருமானம் ஈட்டுவது அல்ல என்றும், மாணவர்களின் தங்குமிடப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மலாயா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஸ்ரீ டாக்டர் நூர் அஸுவான் அபு உஸ்மான் கூறுகையில், இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றார். முதல் கட்டத்தில் 10,000 மாணவர்களுக்கும், இரண்டாம் கட்டத்தில் 30,000 மாணவர்களுக்கும் தங்குமிடம் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.



