
Picture : Awani
கோலாலம்பூர், அக். 3 – இளைஞர்கள் எந்தவொரு தனிநபர், அரசியல் கட்சி அல்லது குழுவின் கருவியாக மாறி, தங்களது சுயமாகச் சிந்திக்கும் மற்றும் கருத்துகளை வெளிப்படுத்தும் திறனை இழக்கக்கூடாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்கள் தற்போதைய தலைமுறையின் தலைவர்களாக இருப்பதால், அவர்கள் தைரியமாகக் கருத்துகளை வெளியிடுவதுடன், அறிவு மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என அவர் கூறினார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 இளைஞர் பொருளாதார மன்றத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அன்வார் இதனைத் தெரிவித்தார். பிரதமர் என்ற முறையில் தமக்கும் அனைத்துத் துறைகளிலும் முழுமையான அறிவு இருப்பதாகக் கருதவில்லை என்றும், இளைஞர்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் எந்தவொரு தனிநபர், அரசியல் கட்சி அல்லது இனத்தின்மீதும் கண்மூடித்தனமான பற்றைக் கொண்டிருக்கக்கூடாது என்றும் அன்வார் வலியுறுத்தினார். அதற்குப் பதிலாக, அவர்கள் தொடர்ந்து அறிவைப் பெறுவதுடன், உண்மை மற்றும் நீதியின் அடிப்படையில் தங்களது நிலைப்பாடுகளை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இஸ்லாமிய உலகம், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் உருவான பல்வேறு சிந்தனைகள் மற்றும் அறிவுசார் மரபுகளை இளைஞர்கள் அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றார். வேறுபட்ட பின்னணியைக் கொண்ட சிந்தனைகள் என்பதற்காக அவற்றை முழுமையாக நிராகரிக்காமல், அவற்றை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, இனம், மதம் அல்லது எந்தக் குழுவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தை இளைஞர்கள் தைரியமாக நிராகரிக்க வேண்டும் என அன்வார் வலியுறுத்தினார். உண்மை, நீதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் புதிய தலைமுறை, நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



