
Picture : Awani
கோலாலம்பூர், அக். 2 – சுங்கை பெசியில் உள்ள மலேசிய அரச விமானப்படை (டியூடிஎம்) குடியிருப்புகளை விரைவாகப் புனரமைத்து, அவற்றை மீண்டும் வீடுகளாகப் பயன்படுத்துவதற்குத் தயார்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.
இன்று அந்தக் குடியிருப்புப் பகுதியை பார்வையிட்ட அன்வார், சுங்கை பெசி நில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டான் ஸ்ரீ முகமட் ஹசான் மரிக்கான், கோலாலம்பூர் மாநகராட்சி மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சர் ஹன்னா இயோ ஆகியோருடன் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக தெரிவித்தார்.
புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தி, அப்பகுதியை வீட்டு வசதிக்காகத் தயார்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் தாம் கேட்டுக்கொண்டதாக பிரதமர் கூறினார். சுங்கை பெசி நிலத் திட்டத்தின் கீழ், 20.23 ஹெக்டேர், அதாவது 50 ஏக்கர் மலாய் ஒதுக்கீட்டு நிலத்தை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் குடியிருப்புப் பகுதிகளுடன் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட சமூக வசதிகளும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக, முன்னாள் டியூடிஎம் குடியிருப்புக் கட்டடங்களில் உள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் புனரமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு கட்டடத்திலும் 80 வீடுகள் என மொத்தம் 160 வீடுகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது நிலத்தைத் தயார்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புனரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், 2027-ஆம் ஆண்டில் குடியிருப்புக்குத் தயாராகும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் சுமார் 1,267.8 சதுர அடி சராசரி பரப்பளவைக் கொண்ட 160 வீடுகளை வழங்கும். குறிப்பாக கோலாலம்பூரில் உள்ள இளம் மலாய் தொழில்முறை பணியாளர்களுக்காக இந்தக் குடியிருப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.



