Tazhal Media – தழல் மீடியா

/ Oct 03, 2026
Latest News
tms

ஆசியான் கால்பந்து கிண்ணம்: வியட்நாமுக்கு எதிரான போட்டியில் கூல்ஸ் இல்லை, ஃபைசல் ஹலீம் சந்தேகம்

Picture : Awani

ஜகார்த்தா, அக். 3 – ஆசியான் கால்பந்து கிண்ணம் 2026 தொடரில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் வியட்நாமை எதிர்கொள்ளவுள்ள மலேசிய அணியில் அணித்தலைவர் டியோன் கூல்ஸ் மற்றும் முன்கள வீரர் ஃபைசல் ஹலீம் இடம்பெறமாட்டார்கள் என இடைக்காலத் தலைமைப் பயிற்றுநர் டான் செங் ஹோ தெரிவித்துள்ளார்.

மலேசியா மற்றும் வியட்நாம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது இடத்துக்கான போட்டி திங்கட்கிழமை ஜகார்த்தாவில் உள்ள கெலோரா புங் கர்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஃபைசல் ஹலீம், சிங்கப்பூருக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகவே அணியில் இருந்து விலகி மலேசியா திரும்பியுள்ளார். இந்தோனேசியாவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட கால் தசை மற்றும் தசைநார் காயத்துக்கு மேலதிக சிகிச்சை பெறுவதற்காக அவர் நாடு திரும்பியதாக செங் ஹோ தெரிவித்தார்.

இதனிடையே, சிங்கப்பூருக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் டியோன் கூல்ஸும் அணியிலிருந்து விலகியுள்ளார். குடும்பம் தொடர்பான அவசரமான தனிப்பட்ட விவகாரங்களைத் தீர்க்க வேண்டியிருந்ததால் அவர் அணியை விட்டு வெளியேறியதாக பயிற்றுநர் கூறினார்.

கூல்ஸின் இல்லாமை அணியின் பாதுகாப்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என செங் ஹோ குறிப்பிட்டார். அவர் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுவதுடன், அணித்தலைவராகவும் செயல்பட்டு வந்தார். அதேவேளை, புதிதாக இயற்கமயமாக்கப்பட்ட வீரர் பெர்க்சன் டா சில்வா, இரண்டு மஞ்சள் அட்டைகள் பெற்றிருந்தாலும் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளதால் வியட்நாமுக்கு எதிரான போட்டியில் விளையாட முடியும் என செங் ஹோ உறுதிப்படுத்தினார்.

சிங்கப்பூரை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போதிலும், மொத்த கோல் எண்ணிக்கையில் இந்தோனேசியாவை விட பின்தங்கியதால் மலேசியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை. தோல்வியின் ஏமாற்றத்திலிருந்து வீரர்கள் மீண்டு வருவதாகவும், அணிக்குள் தற்போது நல்ல சூழ்நிலை நிலவுவதாகவும் செங் ஹோ கூறினார். இறுதிப் போட்டியில் தாய்லாந்தும் இந்தோனேசியாவும் மோதவுள்ளன.

Scroll to Top