Tazhal Media – தழல் மீடியா

/ Oct 08, 2026
Latest News
tms

மேலும் 4,000 மியான்மர் குடிமக்களை ஏற்றுக்கொள்ளத் தயார் – பிரதமர் அன்வார்

Picture : Awani

புத்ராஜெயா, அக். 8 – மலேசியாவில் குடிநுழைவு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 3,000 முதல் 4,000 வரையிலான தனது குடிமக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள மியான்மர் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மியான்மர் அதிபர் மின் ஆங் ஹ்லைங்குடன் புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின்போது இந்த விவகாரம் தொடர்பாக உறுதியளிக்கப்பட்டதாக அன்வார் கூறினார். மியான்மர் குடிமக்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை, அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், குற்றப் பதிவுகளைச் சரிபார்த்தல் மற்றும் இரு நாடுகளும் நிர்ணயித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கு உட்பட்டதாக இருக்கும் என்று அவர் விளக்கினார்.

மியான்மரைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்படும் அனைவரையும் அந்நாடு மீண்டும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் தெரிவித்ததாகவும் அன்வார் குறிப்பிட்டார். இருப்பினும், ஒவ்வொருவரின் குற்றப் பதிவுகளும் தொடர்புடைய ஆவணங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். இதுவரை மலேசியாவில் இருந்து 10,493க்கும் அதிகமான மியான்மர் குடிமக்கள் விமானங்கள் மற்றும் மலேசியக் கடற்படைக் கப்பல்கள் மூலம் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் மலேசியா மற்றும் மியான்மரின் அதிகாரிகள், குறிப்பாக இரு நாடுகளின் கடற்படைகள், ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதிக எண்ணிக்கையிலான தங்கள் குடிமக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வதுடன், அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் மியான்மர் ஏற்றுக்கொள்வதற்கு அன்வார் பாராட்டு தெரிவித்தார்.

மீதமுள்ள மியான்மர் குடிமக்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் உள்துறை அமைச்சகத்துக்கும் மியான்மர் அதிகாரிகளுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். மின் ஆங் ஹ்லைங்குடனான சந்திப்பு வெளிப்படையாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்ததாகக் குறிப்பிட்ட அன்வார், இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெறுவதற்கு இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். இதன் மூலம் தடுப்பு முகாம்களில் உள்ள மியான்மர் குடிமக்களின் நிலை தெளிவுபடுத்தப்பட்டு, உரிய நடைமுறைகளின் கீழ் அவர்களைத் தாய்நாட்டுக்கு பாதுகாப்பாக அனுப்ப முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top