
Picture : Awani
கோலாலம்பூர், செப். 29 – ஷாங்காயில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான உலகத் திறன் போட்டியில் மலேசியா சிறப்பான சாதனையைப் பதிவு செய்ததையடுத்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் அணியினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தப் போட்டியில் மலேசியா ஒரு வெண்கலப் பதக்கத்தையும் 13 சிறப்புத் திறன் பதக்கங்களையும் வென்றுள்ளது. 1995ஆம் ஆண்டு முதல் மலேசியா பங்கேற்று வரும் இந்தப் போட்டியில், இதுவே நாட்டின் சிறந்த சாதனை என்று அன்வார் குறிப்பிட்டார். மொத்தம் 22 இளம் மலேசியர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்கேற்றனர். தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் கல்வி, பயிற்சி துறையில் தங்களது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்திய இளைஞர்கள் நாட்டின் பெயரை உலக அரங்கில் உயர்த்தியுள்ளதாக பிரதமர் பாராட்டினார்.
தொடர்ந்து தங்களது திறன்களை மேம்படுத்தி, சிறந்த நிலையை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் அவர் இளைஞர்களுக்கு ஊக்கமளித்தார். அவர்களின் சாதனை நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார். இதனிடையே, மென்பொருள் பரிசோதனைப் பிரிவில் போட்டியிட்ட சியா சின் வான் வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன், மலேசியாவுக்கான சிறந்த நாட்டுப் பிரதிநிதி விருதையும் பெற்றார். அவருக்கும் பிரதமர் சிறப்பு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஷாங்காய் உலகத் திறன் போட்டியில் மலேசிய அணியினர் 21 திறன் பிரிவுகளில் போட்டியிட்டனர். தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு தொழில்சார் துறைகளை உள்ளடக்கிய இப்போட்டி, திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் நடைபெற்றது. செப்டம்பர் 22 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், 65 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த சுமார் 1,400 திறமையான இளம் தொழில்நுட்ப வல்லுநர்கள் 64 திறன் பிரிவுகளில் பங்கேற்றனர்.



