
Picture : Awani
முன்னாள் மனிதவள அமைச்சரான டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொத்து அறிவிப்பு நோட்டீஸ் வரும் திங்கள்கிழமை வழங்கப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் இதனைத் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, சரவணன், அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கும் இந்த நோட்டீஸ் தொடர்புடையதாகும்.
சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு வரும் திங்கள்கிழமை நோட்டீஸ் வழங்கப்படும். மற்றொரு பிள்ளை தற்போது லண்டனில் கல்வி பயின்று வருவதால், அவரை நவம்பர் மாதம் அழைத்து நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது தொடர்பாக முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டீஸ் பெறுவதற்காக அவர்கள் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வரவுள்ளதாகவும் அப்துல் ஹலிம் அமான் கூறியுள்ளார்.
இந்த சொத்து அறிவிப்பு நோட்டீஸ், 2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 36ஆவது பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற பின்னர், சம்பந்தப்பட்டவர்கள் தங்களுடைய சொத்துகளை அறிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட கால அவகாசம் போதுமானதாக இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கூடுதல் கால அவகாசம் கோரலாம் என்றும், சட்ட நடைமுறைக்கு ஏற்ப தேவையான நீட்டிப்பு வழங்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.
இதனிடையே, சரவணன் முன்னதாக கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். ஒரு நிறுவனத்துக்காக 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில், மொத்தம் 10 இலட்சத்து 97 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை சரவணன் மறுத்து, தாம் குற்றமற்றவர் எனத் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு செப்டம்பர் 29ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.



