Tazhal Media – தழல் மீடியா

/ Sep 26, 2026
Latest News
tms

2027-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம்: நியாயமான ஊதியத்தை உறுதி செய்ய அரசு கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கும் – அன்வார்

Picture : Awani

SHAH ALAM: பட்டதாரிகள் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பையும் நியாயமான ஊதியத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக, 2027-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை அறிவிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

2027-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகளை அரசு தற்போது மேற்கொண்டு வருவதாக அன்வார் கூறினார். பட்டதாரிகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அவர்களின் ஊதிய உயர்வும் அமைய வேண்டும் என்பதற்காக அரசு மேலும் தீவிரமான நடவடிக்கைகளை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.

உற்பத்தித்திறன் அதிகரிப்புக்கும் ஊதிய உயர்வுக்கும் இடையில் பொருத்தமான தொடர்பு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். தென் கொரியாவை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், அந்நாட்டில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் போது ஊதியமும் அதற்கேற்ப உயர்வதாக தெரிவித்தார்.

மலேசியாவிலும் உற்பத்தித்திறன் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அன்வார், ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது ஊதிய உயர்வு மிகவும் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். எனவே, நியாயமான ஊதியத்தை உறுதி செய்வதற்காக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஷா ஆலமில் உள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கேள்வி பதில் அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார். பட்டதாரிகளின் கல்வித் தகுதி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையில் கொள்கைகளை உருவாக்குவது முக்கியம் என்றும் அன்வார் குறிப்பிட்டார். 2027-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் இந்த விவகாரத்தில் மேலும் உறுதியான நடவடிக்கைகள் வெளிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Scroll to Top