
Picture : Awani
SHANGHAI: மலேசியாவின் முக்கிய அரசியலமைப்பு நிறுவனங்களில் ஒன்றான மலாய் ஆட்சியாளர்களின் அரச அமைப்பை மக்கள் தொடர்ந்து பாதுகாத்து, அதன் மாண்பை உயர்த்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். கருத்து வேறுபாடுகள், மாறுபட்ட கருத்துகள் அல்லது முரண்பாடுகள் இருந்தால் அவற்றை உரிய வழிமுறைகள் மற்றும் சரியான நடைமுறைகள் மூலம் முன்வைக்கலாம் என்றும் அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சமீபத்தில் அரச அமைப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், மாநிலத்தின் மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக் குறிப்பிட்டார். மாநில அரசாங்கத்தின் சில முடிவுகள் குறித்து தாம் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறிய அன்வார், மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அரசரின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவதற்கான அதிகாரத்தை எப்போது பெற்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
மலாய் அரசரை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவை ஒரு மலாய் தலைவர் கொண்டுவருவது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசியலமைப்பை மதிப்பதும் அதனைப் பாதுகாப்பதும் அனைவரின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அரசியலமைப்பை மீறும் அல்லது அதனை அவமதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
இதற்கிடையில், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில், மாநிலச் செயலாளர் டத்தோ முகமட் ஸாஃபிர் இப்ராஹிம் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் டத்தோ முஸல்மா முஸ்தபா கமால் ஆகியோரின் பணிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படும் என்றும், நாட்டின் அரசியலமைப்பு மதிக்கப்படுவதை உறுதி செய்வதே தமது பொறுப்பு என்றும் அன்வார் வலியுறுத்தினார்.



