Tazhal Media – தழல் மீடியா

/ Oct 05, 2026
Latest News
tms

2026 பஹ்ரைன் F1 போட்டியை வெற்றிகரமாக நடத்திய பஹ்ரைனுக்கு அன்வார் பாராட்டு

Picture : Awani

கோலாலம்பூர், அக். 5 – 2026ஆம் ஆண்டு பஹ்ரைன் F1 கிராண்ட் பிரி போட்டியை மலேசியாவில் வெற்றிகரமாக நடத்துவதற்கு நம்பிக்கை வழங்கிய பஹ்ரைன் அரசாங்கத்துக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உயர்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

செப்பாங் சர்வதேச பந்தயத் தளத்துக்கும் பஹ்ரைன் சர்வதேச பந்தயத் தளத்துக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்புடன், போட்டி ஏற்பாட்டுக் குழுவினரின் அர்ப்பணிப்பும் இணைந்ததன் மூலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் போட்டி வெற்றிகரமாக நடைபெற்றதாக அன்வார் தெரிவித்தார்.

இந்த வெற்றிகரமான ஏற்பாடு மலேசியாவுக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பின்னால் உழைத்த பேருந்து ஓட்டுநர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், வணிகர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்வார் பாராட்டு தெரிவித்தார்.

போட்டியின் பிரம்மாண்டமான நிகழ்வுகளுக்குப் பின்னால் அவர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இருப்பதாக அவர் கூறினார். எனவே, அவர்களின் பங்களிப்பு உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியைக் காண வந்த F1 ரசிகர்களுக்கும் அன்வார் நன்றி தெரிவித்தார். குறிப்பாக, போட்டியை உற்சாகப்படுத்திய மலேசியர்களுக்கும், வெளிநாட்டு விருந்தினர்களை அன்புடனும் பண்புடனும் வரவேற்ற மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

மலேசிய மக்கள் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு நட்பான, திறந்த மற்றும் நல்லிணக்க உணர்வு கொண்ட நாட்டின் முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அன்வார் கூறினார். 2026 பஹ்ரைன் F1 கிராண்ட் பிரி போட்டி அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை செப்பாங் சர்வதேச பந்தயத் தளத்தில் நடைபெற்றது. இதன் மூலம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எஃப்1 போட்டி மீண்டும் செப்பாங் தளத்துக்குத் திரும்பியது.

இறுதிப் போட்டியில் ரெட் புல் ரேசிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடத்தையும், மெர்சிடீஸ்-ஏஎம்ஜி பெட்ரோனாஸ் அணியின் கிமி அன்டோனெல்லி இரண்டாவது இடத்தையும், ஃபெராரி அணியின் லூயிஸ் ஹாமில்டன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

Scroll to Top