
மலேசியாவில் இந்தியப் பாரம்பரிய ஆடை விற்பனைத் துறையில் செயல்பட்டு வரும் ராஜி சில்க் பேலஸ், ASEAN Records மற்றும் ASIA Records ஆகிய இரு சாதனைப் பதிவுகளிலும் அங்கீகாரம் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. மேலும், மலேசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும் இந்நிறுவனம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சாதனையை முன்னிட்டு, தீபாவளி 2026 கொண்டாட்டத்துடன் இணைந்த சிறப்பு நிகழ்ச்சி அக்டோபர் 21ஆம் தேதி மாலை கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெற்றது. நிகழ்ச்சியைச் சிலாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த யாங் முலியா தெங்கு டத்தோ டாக்டர் ஹிஷாமுடின் ஜைசி பின் யாம் தெங்கு பெண்டஹாரா அஸ்மான் ஷா அல் ஹாஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அவர், வணிக வளர்ச்சியுடன் சமூக நலனிலும் கவனம் செலுத்தும் ராஜி சில்க் பேலஸின் முயற்சிகளைப் பாராட்டினார். நிறுவனத்தின் சாதனைப் பயணத்தில் பங்களித்த தலைமை இயக்குநர் டத்தோ அலி ஜின்னா, இயக்குநர் டத்தோ கணேசன் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், இவ்வளர்ச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 19 கிளைகளைக் கொண்டுள்ள ராஜி சில்க் பேலஸ், பாரம்பரிய இந்திய ஆடைகள் விற்பனையுடன் பேஷன் நகைகள், தையல் சேவைகள் மற்றும் ஆடை விநியோகம் ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறது.

விழாவின் மற்றொரு முக்கிய அம்சமாகக் குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன. பண்டிகைக் கொண்டாட்டத்தைச் சமூகப் பங்களிப்புடன் இணைக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வணிக விரிவாக்கம், சாதனை அங்கீகாரம் மற்றும் சமூகநலச் செயல்பாடுகள் எனப் பல்வேறு அம்சங்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, ராஜி சில்க் பேலஸின் வளர்ச்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
-யாழினி வீரா



