
கோலாலம்பூர், நவம்பர் 2 – 2026ஆம் ஆண்டு தீபாவளி திருவிழாவை முன்னிட்டு புக்கிட் ஜலீல் தேசிய விளையாட்டு அரங்க வளாகத்தில் அஜெண்டா சூரியா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விற்பனைக் கண்காட்சி மூலம் 400க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.
24ஆவது முறையாக நடைபெறும் இக்கண்காட்சி, குறிப்பாக இந்திய சமூகத்தைச் சேர்ந்த சிறு வணிகர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தளமாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்டை நாடுகளைச் சேர்ந்த வணிகர்களுக்கும் இம்முறை வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தீபாவளிக்குத் தேவையான பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள முடிவதாக அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற கண்காட்சியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய சமூகத்தினருக்கென பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதுடன், பண்டிகைக்கான தயாரிப்புகளையும் எளிதாக்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்றார்.
மேலும், சுமார் எட்டு நாட்கள் நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதுவரை கிடைத்துள்ள மக்கள் ஆதரவைப் பொறுத்தவரை 300,000 பார்வையாளர்கள் என்ற இலக்கை அடைய முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மோசமான வானிலை நிலவியபோதும் பொதுமக்கள் திரளாக வருகை தருவது கண்காட்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
தீபாவளி போன்ற பண்டிகைகள் பல்வேறு இன மக்களையும் ஒன்றிணைத்து, பரஸ்பர நல்லுறவையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கண்காட்சியால் கிடைக்கும் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் தொடர்ந்து நிலைத்திருக்க, இந்நிகழ்ச்சி ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
-யாழினி வீரா



