Tazhal Media – தழல் மீடியா

/ Nov 02, 2026
Latest News
tms

பாகான் டத்தோவில் 2000 இந்திய குடும்பங்களுக்கு தீபாவளிப் பரிசு; 700 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

பாகான் டத்தோ, நவம்பர் 3 – தீபாவளியை முன்னிட்டு பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு உதவும் வகையில் குடும்ப நலன் மற்றும் கல்வியை உள்ளடக்கிய பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய B40 பிரிவைச் சேர்ந்த 2,000 இந்திய குடும்பங்களுக்கு பண்டிகைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேநேரத்தில், கல்வி பயிலும் மாணவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் 700 மாணவர்களுக்கு தலா 100 ரிங்கிட் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் கல்விச் செலவுகளுக்கு ஓரளவு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தொகுதியில் இயங்கும் 16 தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் வசதிகளை நவீனமயமாக்கும் நோக்கில் ஸ்மார்ட் போர்டு தொலைக்காட்சிகளும் வழங்கப்பட்டன.

தீபாவளிக் கொண்டாட்டத்தை சமூகத்தின் பல்வேறு தேவைகளுடன் இணைக்கும் வகையில் இந்த உதவிகள் அமைந்துள்ளன.

துணைப் பிரதமரும் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். பண்டிகைக் கால நிவாரணத்துடன் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.

-யாழினி வீரா

Scroll to Top