Tazhal Media – தழல் மீடியா

/ Nov 02, 2026
Latest News
tms

மலேசியாவின் முன்னாள் தேசிய பந்துவீச்சு வீராங்கனை ஷெர்லி சோவ் காலமானார்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 3 – மலேசியாவின் தேசிய பந்துவீச்சு விளையாட்டில் தனக்கென ஒரு வரலாற்றைப் படைத்த முன்னாள் வீராங்கனை ஷெர்லி சோவ் தனது 76ஆவது வயதில் காலமானார். அவரது மறைவு நாட்டின் பந்துவீச்சு விளையாட்டுத் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1979ஆம் ஆண்டின் தேசிய சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதைப் பெற்ற முதல் பந்துவீச்சு வீராங்கனை என்ற பெருமைக்குரியவர் ஷெர்லி சோவ். உடல்நலக் குறைவு காரணமாக நவம்பர் 2ஆம் தேதி ஈப்போவில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது விளையாட்டு வாழ்க்கையில் பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள அவர், 1994ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான மூவர் குழுப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். அப்போட்டியில் லிடியா குவா மற்றும் டத்தோ ஷாலின் ஸுல்கிப்ளியுடன் இணைந்து இந்தச் சாதனையைப் படைத்தார். இரட்டையர் பிரிவிலும் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.

இதற்கு முன்னதாக 1977, 1989, 1991 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார். 1995ஆம் ஆண்டு உலகப் பந்துவீச்சுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் இத்துறையை விட்டு விலகாத அவர், பேராக்கில் இளம் வீரர்களுக்குப் பயிற்சியளித்து புதிய தலைமுறை வீரர்கள் உருவாகப் பங்களித்தார்.

மலேசிய டென்பின் பந்துவீச்சுச் சங்கம் (MTBC), அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், மலேசியப் பந்துவீச்சு விளையாட்டிற்கான அவரது சேவைகள் என்றும் நினைவுகூரப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Scroll to Top