
கோலாலம்பூர், நவம்பர் 3 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 250 குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி, சமூக நலப்பணியில் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது மலேசியா ஸ்ரீ ஆதி சங்கரர் திருமடம்.
திருமடத்தின் ஏற்பாட்டில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சி, ஆன்மிகம், சமூக சேவை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இணைந்த கொண்டாட்டமாக அமைந்தது.
இந்த நற்பணியைச் சிறப்பாக முன்னெடுத்த திருமடத்தின் நிறுவனர் சுவாமி மகேந்திராவுக்கு நிகழ்ச்சியில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அவரது தலைமையில் நடைபெற்ற இம்முயற்சி, தீபாவளிக் காலத்தில் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியையும் ஆதரவையும் வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது.
அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியுடன் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதால் விழா மேலும் சிறப்புப் பெற்றது. மலேசியக் கலைஞர்களான ப. மகேஸ்வரன் மற்றும் பென்ஜி ஆகியோர் தங்களது இசைத் திறமையால் பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

குறிப்பாக, இருவரும் இணைந்து வழங்கிய பாடல்கள் அரங்கில் இருந்தவர்களின் வரவேற்பைப் பெற்றன. அதேவேளையில், மலேசிய சத்யராஜ் என அழைக்கப்படும் ப. மகேஸ்வரனின் பலகுரல் நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியை குமாரி கலைவாணி தொகுத்து வழங்கினார்.
சமூகத்தின் பல்வேறு குடும்பங்களை ஒன்றிணைத்த இவ்விழா, தீபாவளியின் அடிப்படை நோக்கமான அன்பு, பகிர்வு மற்றும் மனிதநேயத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது. நலத்திட்டத்துடன் கலை நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.
-யாழினி வீரா



