Tazhal Media – தழல் மீடியா

/ Nov 02, 2026
Latest News
tms

மலாக்கா மாநிலத்தின் 55 வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் அப்ராவ் விளக்கமளிக்க வேண்டும் – சிவமலர் வலியுறுத்தல்

மலாக்கா, நவம்பர் 3 – மலாக்கா மாநிலத்தில் கடந்த 17 மாதங்களாகவே தொடங்கப்படாமல் இருந்த 55 வளர்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலவரத்தை மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்ராவ் யூசோ வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

மாநிலத் தேர்தலை முன்னிட்டு மக்களிடம் புதிய ஆட்சியுரிமையைக் கோருவதற்கு முன்பு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாட்டு முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிப்பது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவலின்படி, மொத்தம் 241 வளர்ச்சித் திட்டங்களில் 86 திட்டங்கள் நிறைவடைந்திருந்தன. மேலும் 100 திட்டங்கள் செயல்பாட்டில் இருந்த நிலையில், 55 திட்டங்கள் இன்னும் தொடங்கப்படாமல் இருந்தன.

அதே ஆண்டு மே 31ஆம் தேதி நிலவரப்படி, 88 மில்லியன் ரிங்கிட் வளர்ச்சி நிதியில் 19.52 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவிடப்பட்டிருந்ததாகவும், இது மொத்த ஒதுக்கீட்டில் 22.18 விழுக்காடு என்றும் சிவமலர் சுட்டிக்காட்டினார்.

கிட்டத்தட்ட 17 மாதங்கள் கடந்துள்ள நிலையில், எத்தனை திட்டங்கள் நிறைவடைந்துள்ளன, எத்தனை இன்னும் தாமதத்தில் உள்ளன என்பதை மக்கள் அறிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

திட்டங்களின் இடம், நிதி ஒதுக்கீடு, செயல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் நிறைவு காலக்கெடு உள்ளிட்ட விவரங்களை மாநில அரசு வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலப் பிரச்சினைகள், ஒப்பந்ததாரர் சிக்கல்கள் உள்ளிட்ட தடைகள் இருந்தாலும், அவற்றுக்கான தீர்வுகளையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

மக்களின் வரிப்பணம் முறையாகப் பயன்படுத்தப்படுவதையும், அறிவிக்கப்பட்ட வளர்ச்சிகள் நடைமுறைக்கு வருவதையும் உறுதிப்படுத்துவதே முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top