
கோலாலம்பூர், நவம்பர் 3 – தீபாவளிக் கொண்டாட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில், பிரிக்பீல்ட்ஸில் பார்வையற்றோர் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தீபாவளி உதவிகளை வழங்கியுள்ளார் பிகேஆர் கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி.
கடந்த ஆண்டும் இதேபோன்ற உதவியை முன்னெடுத்த அவர், இவ்வாண்டும் தீபாவளியை முன்னிட்டு அக்குடும்பங்களை நேரில் சந்தித்து, பண்டிகைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தம்மால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாகக் கருத்துரைத்த சிவமலர் கணபதி, மற்றவர்களின் நலனையும் நினைத்துப் பார்க்கும்போதுதான் தீபாவளிக் கொண்டாட்டம் முழுமையடைவதாகக் குறிப்பிட்டார்.

பார்வையற்றவர்களாக இருந்தாலும், பண்டிகையின் மகிழ்ச்சியையும் அன்பையும் அனுபவிப்பதற்கான உரிமை அவர்களுக்கும் உண்டு என்றும், சமூகத்தில் யாரும் புறக்கணிக்கப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
உதவி வழங்கியதுடன் நின்றுவிடாமல், குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு அவர்களது நலன்களைப் பகிர்ந்துகொண்டது மனநிறைவை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நற்பணியை ஒருங்கிணைத்த திரு ரைடோ மற்றும் அவரது குழுவினருக்கும் அவர் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

பண்டிகைக் காலங்களில் வசதி குறைந்தவர்களையும், சிறப்புத் தேவையுடையவர்களையும் நினைவில் கொண்டு உதவிக்கரம் நீட்டுவது சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதை இம்முயற்சி எடுத்துரைக்கிறது.



