
கோலாலம்பூர், நவம்பர் 3 – வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் நோக்கில் கோலாலம்பூரில் 70 பேருக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களைத் தனது சொந்த பங்களிப்பில் வழங்கியுள்ளார் முஸ்தபா கான்.
தேவைப்படுவோருக்கு உதவுவதையும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தனது தொடர் முயற்சியாகக் கொண்டுள்ள அவர், இந்நலத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஏஎஸ்பி விஷ்ணு மற்றும் டத்தோ ஸ்ரீ அரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக, நிகழ்ச்சி நடைபெறுவதற்கான மண்டபத்தை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக வழங்கிய டத்தோ ஸ்ரீ அரிக்கு முஸ்தபா கான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்று தமக்கு ஆதரவும் வாழ்த்துகளும் வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பிறருக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே தனக்குப் பெரிய செல்வம் என்றும், தன்னால் இயன்றவரை தொடர்ந்து ஆதரவற்ற மற்றும் உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமூகப் பொறுப்புணர்வுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, மனிதநேயத்தையும் பகிர்ந்தளிக்கும் பண்பையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.



