Tazhal Media – தழல் மீடியா

/ Nov 04, 2026
Latest News
tms

PERKESO சந்தா செலுத்தாத 598 விஐபிக்கள் அடையாளம் காணப்பட்டனர் – டிசம்பர் 7ஆம் தேதிக்குள் நிலுவையைச் செலுத்த உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர் 4: வீட்டுப் பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு அமைப்பான PERKESO சந்தாவைச் செலுத்தத் தவறிய 598 உயர்மட்டப் பிரமுகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் விஐபி (VIP), மிக முக்கியப் பிரமுகர்கள் (VVIP), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் (ADUN) அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனைத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட முதலாளிகள் தங்களது நிலுவைச் சந்தாக்களைச் செலுத்துவதற்கு 2026 டிசம்பர் 7ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குள் செலுத்தத் தவறினால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

விஐபி மற்றும் விஐவிஐபி அந்தஸ்தில் உள்ளவர்கள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரசுத் துறை மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளை வகிப்பவர்களும் சந்தா செலுத்தத் தவறியவர்களில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலவரப்படி, மொத்தம் 26,669 முதலாளிகள் PERKESO சந்தா நிலுவை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வீட்டுப் பணியாளர்கள் என்றால் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டுமல்ல; தோட்டப் பராமரிப்பாளர்கள், ஓட்டுநர்கள், முதியோர் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்களும் இதில் அடங்குவதாக அவர் விளக்கினார்.

ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்த பின்னர் தீர்வு தேடுவதைவிட, வீட்டுப் பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பை முன்கூட்டியே உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரில் உள்ள PERKESO தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நேபாள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், விதிமுறைகளைப் பின்பற்றத் தவறும் முதலாளிகளுக்கு அபராதமாக RM10,000 வரை விதிக்கப்படலாம் அல்லது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அல்லது இரண்டும் ஒருசேர விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் சந்தா நிலுவையைச் செலுத்தாமல் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் முதலாளிகளின் அடையாளங்களைப் பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகளையும் PERKESO நிராகரிக்கவில்லை.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட முதலாளிகள் அனைவரும் தங்களது PERKESO சந்தா நிலவரத்தைச் சரிபார்த்து, நிலுவையில் உள்ள தொகையை 2026 டிசம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

எந்தவொரு தரப்பினரையும் அவமானப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும், இருப்பினும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் எந்தவித சமரசமும் இருக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Scroll to Top