
லபுவான்: லபுவான் பகுதியில் தனியார் கல்வித் துறையின் வளர்ச்சிக்கும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த கல்விச் சேவைக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், லபுவான் சர்வதேசப் பள்ளியின் (Labuan International School – LIS) நிர்வாக அதிகாரி ராஜ் கணேஷ் சந்திரகாசன் நிதியுதவி வழங்கியதுடன், சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தார்.
நேற்று Palm Beach Resort & Spa, Labuan Island-இல் நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தேநீர் விருந்து நிகழ்ச்சியில் (Hi-Tea), லபுவான் தனியார் கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்புக்கு (Gabungan Guru-Guru Pendidikan Swasta Labuan) அவர் தன்னால் இயன்ற நிதியுதவியை வழங்கினார்.

அதே நிகழ்ச்சியில், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் அணுகுமுறை மற்றும் கல்விச் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு ஆதரவும் ஊக்கமும் வழங்கிய கூட்டரசுப் பிரதேச லபுவான் கல்வித் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ராஜ் கணேஷ் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக, திரு. யாஹ்யா மற்றும் திருமதி சுலேஹா ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் பாராட்டினார்.

மேலும், லபுவான் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருப்பது பெருமையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விருது பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
லபுவானில் கல்வித் தரத்தை உயர்த்துவதிலும், ஆசிரியர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் முக்கியப் பங்காற்றுவதாக அவர் தனது கருத்தில் வலியுறுத்தினார்.



