Tazhal Media – தழல் மீடியா

/ Nov 04, 2026
Latest News
tms

காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களுக்கு விரைவில் சட்டப்பூர்வ தீர்வு

கோலாலம்பூர், நவம்பர் 4: நேபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் காணாமல் போன மலேசியர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை உறுதிப்படுத்தும் நடைமுறைகளை விரைவுபடுத்த மலேசியா மற்றும் நேபாள அரசாங்கங்கள் சட்ட ரீதியிலான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றன.

காணாமல் போனவர்களின் உடல்கள் கண்டறியப்படாத சூழலில், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட நடைமுறைகளின்படி ஏழு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளின் தலைமைச் சட்ட ஆலோசகர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மூலம் விரைவான தீர்வைக் கண்டறியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

தற்போதுள்ள சட்ட நடைமுறைகளின்படி, காணாமல் போன ஒருவரின் நிலையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். இதனால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாரிசுரிமை மற்றும் இழப்பீட்டுத் தொகை கோருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அவர் விளக்கினார்.

“காணாமல் போனவர்கள் தொடர்பான சில வழக்குகளில், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பு ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

“எனவே, காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும், குடும்பத்தின் இதர தேவைகள் மற்றும் ஏற்பாடுகளைச் செய்வதற்கும் வாரிசுகள் ஏழு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க, இரு நாடுகளின் தலைமைச் சட்ட ஆலோசகர்கள் மூலம் நடைமுறைகளை விரைவுபடுத்த முயற்சி செய்து வருகிறோம்,” என்றார்.

கோலாலம்பூரில் உள்ள PERKESO தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நேபாள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு PERKESO நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், காணாமல் போனவர்களின் சட்டப்பூர்வ நிலை உறுதிப்படுத்தப்படுவதில் ஏற்படும் தாமதம், அவர்களது குடும்பங்களின் வணிக நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும் என ரமணன் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, நிறுவனங்களைத் தொடர்ந்து நடத்துவதா அல்லது அதன் செயல்பாடுகளை நிறுத்துவதா என்பதைத் தீர்மானிப்பதிலும், ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்புகளை முன்னெடுப்பதிலும் குடும்ப உறுப்பினர்களுக்குச் சிரமங்கள் ஏற்படலாம். இதனால் நீண்டகால நிதிப் பாதிப்புகளும் உருவாகக்கூடும் என்றார்.

இதற்கிடையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிதியுதவிகளையும் தொடர்ச்சியான ஆதரவையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்காகப் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்புப் பிரிவு (ICU), PERKESO உள்ளிட்ட பல்வேறு அரசாங்க அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top