
கோலாலம்பூர் 4 நவம்பர் : கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்ஸில் நடைபெற்ற தீபாவளி சந்தைக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நேரில் சென்ற தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசிய துணைதலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், அங்குள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின்போது தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் நிலவிய உற்சாகமான கொண்டாட்டச் சூழலை அவர் நேரில் கண்டு மகிழ்ந்தார்.
இது தொடர்பாகத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள டத்தோஸ்ரீ சரவணன், வணிகர்கள் மற்றும் சந்தைக்கு வருகை தந்த பொதுமக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கலாசாரம், பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை உணர்வு நிறைந்த தீபாவளிக் கொண்டாட்டங்கள் மலேசியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன, மத மற்றும் கலாசார வேறுபாடுகளைக் கடந்து, ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு, அன்புடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெரிய மலேசியக் குடும்பமாக மக்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து நிற்பதே நாட்டின் தனிச்சிறப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பண்புகளை எதிர்காலத் தலைமுறையினருக்கும் பாதுகாத்து எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.



