
சிரம்பான் 14 நவம்பர் : நெகிரி செம்பிலான் மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சுமார் 7,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை சிரம்பான் மாநகர மன்ற மண்டபத்தில் (MBS) நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு தீபாவளி திருவிழாக் கொண்டாட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு RM30,000-லிருந்து RM70,000 ஆக உயர்த்தியுள்ளது.மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் இதனைத் தெரிவித்தார். தீபாவளியை முன்னிட்டு நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தின் பாரம்பரிய உணவுகள் உட்பட பல்வேறு இனங்களையும் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் உணவு வகைகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மக்கள் அனைவரும் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டு தீபாவளியைக் கொண்டாடுமாறு மாநில அரசு அழைப்பு விடுப்பதாகவும், இதன் மூலம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.சிரம்பானில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தீபாவளி திருவிழாக் கண்காட்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், தோட்டப்புறங்கள் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளிலும் தீபாவளியை முன்னிட்டு உதவிகள் மற்றும் நன்கொடைகள் வழங்குவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேவையுள்ள இந்திய சமூகத்தினர் எவரும் அரசாங்கத்தின் உதவிகளிலிருந்து விடுபடக் கூடாது என்பதே மாநில அரசின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், சிரம்பானில் உள்ள டத்தோ லீ ஃபோங் யீ பகுதியை ‘லிட்டில் இந்தியா’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசிதழில் பதிவு செய்வது தொடர்பான முன்மொழிவு குறித்து சிரம்பான் மாநகர மேயருடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என்றும் மந்திரி பெசார் தெரிவித்தார்.ஏற்கெனவே உள்ளூர் மக்களால் ‘லிட்டில் இந்தியா’ என அழைக்கப்படும் இப்பகுதி, மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மேம்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



