Tazhal Media – தழல் மீடியா

/ Nov 07, 2026
Latest News
tms

ECRL ரயில் சேவையின் சோதனை ஓட்டம் தொடக்கம் – டிசம்பர் 12ஆம் தேதி பயணிகள் சேவை ஆரம்பிக்க இலக்கு

கோலாலம்பூர், நவம்பர் 7: மலேசியாவின் கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்புத் திட்டமான ECRL (East Coast Rail Link) தனது சோதனை ஓட்டத்தை இன்று தொடங்கியுள்ளது. இதன் மூலம் எதிர்வரும் டிசம்பர் 12ஆம் தேதி வணிக ரீதியிலான பயணிகள் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான இறுதிக்கட்டத் தயாரிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.Malaysia Rail Link Sdn Bhd (MRL) மற்றும் China Communications Construction Sdn Bhd ஆகிய நிறுவனங்களின் 50:50 கூட்டு முயற்சியான ECRL Operation Sdn Bhd இந்தச் சோதனை நடவடிக்கைகளை நிர்வகிக்கிறது.நவம்பர் 7ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தச் சோதனை ஓட்டத்தில் கோம்பாக் முதல் கோத்தா பாரு வரையிலான இருவழிப் பயணங்களும் இடம்பெறும்.

விரைவு ரயில் மற்றும் இடைநிலை நிறுத்தங்களைக் கொண்ட சேவைகளும் சோதிக்கப்படவுள்ளன.ரயில் இயக்கத் தயார்நிலை, சேவையின் செயல்திறன், நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பயணிகளின் அனுபவம் உள்ளிட்ட அம்சங்கள் உண்மையான இயக்கச் சூழலில் மதிப்பீடு செய்யப்படும்.இன்றைய முதல் சோதனைப் பயணம் காலை 7 மணிக்கு சிலாங்கூரிலுள்ள கோம்பாக் ஒருங்கிணைந்த முனையத்திலிருந்து புறப்பட்டு, காலை 8.28 மணிக்கு பகாங் மாநிலத்தின் குவாந்தானிலுள்ள KotaSAS நிலையத்தைச் சென்றடைந்தது.88 நிமிடங்களில் நிறைவடைந்த இந்தப் பயணத்தில் 170 பேர் பயணித்ததுடன், ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

சோதனைக் காலத்தில் வணிகப் பயணிகள் சேவைக்காகத் திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும். பயண அனுமதிச் சீட்டுகள் வழங்குதல் மற்றும் ரயில் பணியாளர்களின் சேவைகளும் இதில் இடம்பெறும்.இதற்கிடையில், கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி கோத்தா பாரு – கோம்பாக் இடையிலான ECRL திட்டத்தின் முதற்கட்டக் கட்டுமானப் பணிகள் 98.47 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை கிழக்குக் கடற்கரை மாநிலங்களுக்கும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதுடன், சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.டிசம்பர் 12ஆம் தேதி பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தரங்களும் உறுதிப்படுத்தப்படும் என MRL தெரிவித்துள்ளது.

Scroll to Top