
கோலாலம்பூர், நவம்பர் 7: சிலாங்கூர் மற்றும் பேராக் மாநிலங்களில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதால், தற்காலிக நிவாரண மையங்களில் (PPS) தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,504 ஆக அதிகரித்துள்ளது.இன்று காலை 1,404 பேராக இருந்த இந்த எண்ணிக்கை, மாலை நிலவரப்படி கணிசமாக உயர்ந்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 251 குடும்பங்களைச் சேர்ந்த 4,234 பேர் ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காலை நிலவரப்படி 316 குடும்பங்களைச் சேர்ந்த 1,206 பேர் ஒன்பது மையங்களில் தங்கியிருந்தனர்.கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் நான்கு நிவாரண மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் Sekolah Agama Batu Lapan Ijok மையத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 2,999 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். SK Parit Mahang மையத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 799 பேரும், SK Dato’ Maharaja Lela மையத்தில் 192 பேரும், SK Jaya Setia மையத்தில் 71 பேரும் தங்கியுள்ளனர்.ஷா ஆலாம் பகுதியில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் மொத்தம் 106 பேர் தங்கியுள்ளனர். கிள்ளான், Bukit Kapar பகுதியில் உள்ள Dewan Masjid Al-Taqwa மையத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கோலா சிலாங்கூரில் உள்ள SK Desa Aman மற்றும் ஷா ஆலாமில் உள்ள SK Merbau Sempak ஆகிய இரண்டு நிவாரண மையங்கள் மூடப்பட்டுள்ளன.பேராக் மாநிலத்தில் வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. 79 குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் ஹிலிர் பேராக் மற்றும் மஞ்சோங் மாவட்டங்களில் உள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
Teluk Intan, Langkap பகுதியில் உள்ள MPTI மண்டபத்தில் 137 பேரும், MPTI ஓய்வு இல்ல மண்டபத்தில் 107 பேரும் தங்கியுள்ளனர். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் மஞ்சோங் சமூக மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று இரவு பேராக்கின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என முன்னறிவித்துள்ளது.வெள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



