
தோஹா, நவம்பர் 7: மலேசியாவில் இணைய வங்கிச் சேவைகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.வங்கிகள் மற்றும் நாட்டின் இணையக் கட்டமைப்புகள் மீது இணையவழித் தாக்குதல்களை மேற்கொள்ள சில தரப்பினர் முயற்சித்து வந்தாலும், இதுவரை வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்படவில்லை என்றும், இணைய வங்கிச் சேவைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
குறிப்பாக, அண்மையில் பேங்க் ராக்யாட் (Bank Rakyat) இணையத்தளம் ஊடுருவப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்துரைத்த அவர், அந்தச் சம்பவம் இணையத்தளத்தின் முகப்புத் தோற்றத்தை மாற்றியமைத்த (Web Defacement) சம்பவம் மட்டுமே என விளக்கினார்.மூன்றாம் தரப்பினரால் நிர்வகிக்கப்பட்டு வந்த இணையத்தளமே ஊடுருவலுக்கு உள்ளானதாகவும், பாதிக்கப்பட்ட சேவையகத்திற்கான அணுகலை வங்கி உடனடியாகத் தடுத்து, தனது முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள i-Rakyat இணையச் சேவைக்கு பயனர்களை மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கத்தாரில் நடைபெற்ற 2026 மலேசிய விளையாட்டுப் போட்டியின் (SUQMA) பந்துவீச்சுப் போட்டியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.இதற்கிடையில், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு எதிரான இணைய மற்றும் கலப்பு வகை பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு (MKN) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளதாக ஃபஹ்மி கூறினார்.
இதில் இணையக் கட்டமைப்புகள், இணையத்தளங்கள் மற்றும் தரவுத்தளங்களின் பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.மேலும், அரசாங்கத்தின் அனைத்து டிஜிட்டல் சொத்துகள், வங்கிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் (GLC) இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் தேசிய இணையப் பாதுகாப்பு முகமை (NACSA) மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டின் நிதித்துறை மற்றும் இணைய வங்கிச் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.



