
கோலாலம்பூர், நவம்பர் 7:மலேசியாவின் பன்முகத்தன்மையும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்வதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
நாளை (நவம்பர் 8) கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்கள் ஒருவருக்கொருவர் மதிப்பளித்து, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டு, சமூகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தி வருவது நாட்டின் சிறப்பம்சம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நல்லிணக்கத்தைத் தொடர்ந்து பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்றும், அதுவே மலேசியாவின் உண்மையான பலம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், மலேசியாவில் தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்து மக்களுக்கும், குறிப்பாகத் தனது சொந்த ஊரான பாகான் டத்தோவில் வசிக்கும் மக்களுக்கும் அவர் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தீபாவளித் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் மறக்க முடியாத இனிய நினைவுகளையும் வழங்கட்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.



