
ஷா ஆலாம், நவம்பர் 7:மலேசியாவின் பல்லின மற்றும் பல சமய மக்களிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேலும் வலுப்படுத்தும் ஒரு சிறப்பான விழாவாகத் தீபாவளி அமைய வேண்டும் என சிலாங்கூர் மாநில சுல்தான் DYMM சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்-ஹாஜ் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு, சிலாங்கூர் மாநிலத்தின் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் உடன் இணைந்து, மலேசியா முழுவதும் உள்ள இந்து மக்களுக்கும், குறிப்பாகச் சிலாங்கூர் மாநில இந்து மக்களுக்கும் தங்களது தீபாவளி நல்வாழ்த்துகளை மாட்சிமை தங்கிய மன்னர் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒருவரையொருவர் மதிக்கும் பண்பு, வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்தல் மற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற நற்பண்புகள் தொடர்ந்து வளர்க்கப்பட வேண்டும் என்றும், இவை மக்களிடையே சகோதரத்துவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தற்போதைய சூழலில், குறிப்பாக சமூக ஊடகங்கள் வாயிலாக வெறுப்புணர்வையும் பிளவுகளையும் உருவாக்க முயற்சிக்கும் வெளிப்புற சக்திகளின் தாக்கத்தைத் தடுக்க, மக்களிடையே உறுதியான புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடும்போது மலேசிய மக்கள் வெளிப்படுத்தும் பரஸ்பர மரியாதையும் ஒற்றுமையும் நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டும் முக்கிய அரணாக அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்தத் தீபாவளித் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வழங்குவதுடன், மலேசியாவின் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதியையும் மேலும் வலுப்படுத்தட்டும் என மாட்சிமை தங்கிய மன்னர் தம்பதியினர் வாழ்த்தியுள்ளனர்.



