
கோலாலம்பூர், நவம்பர் 7:இருளை அகற்றி ஒளி பிறப்பது, தீமையை நன்மை வெல்வது, அறியாமையை அகற்றி அறிவைப் பெறுவது ஆகிய உயரிய வாழ்வியல் தத்துவங்களைத் தீபாவளி உணர்த்துவதாக மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மகிழ்ச்சியையும் ஒளியையும் ஏந்தி வரும் இத்திருநாள், மனித வாழ்வில் நன்மை, அறிவு மற்றும் நேர்மறையான சிந்தனைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு கலாசாரங்களையும் பாரம்பரியங்களையும் கொண்ட பல்லின சமூகமாக விளங்கும் மலேசியாவில், ஒருவரையொருவர் மதித்தல், புரிந்துகொள்ளுதல் மற்றும் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகள் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தவும், சமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைக்கவும், குறிப்பாக உதவி தேவைப்படுவோரிடம் மனிதநேயத்தையும் அக்கறையையும் வெளிப்படுத்தவும் தீபாவளி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, திறந்த மனப்பான்மை, தூய சிந்தனை மற்றும் முற்போக்கான அணுகுமுறையைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்குத் தீபாவளி புதிய உத்வேகத்தை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், அதன் மூலம் மக்களின் மாண்பையும் நாட்டின் நல்லிணக்கத்தையும் மேலும் உயர்த்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் தனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அவர், இத்திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நல்வாழ்வைக் கொண்டு வரட்டும் என வாழ்த்தியுள்ளார்.



