
மலாக்கா, நவம்பர் 11 – இணையவழி மோசடிக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 11 தாய்லாந்து நாட்டவர்களை மலாக்கா போலீசார் அதிரடிச் சோதனையில் கைது செய்துள்ளனர்.
தாமான் கோத்தா ஷாபண்டார் பகுதியில் இணைய மோசடி அழைப்பு மையமாகச் செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் ஒரு வளாகத்தில் திங்கட்கிழமை இரவு சுமார் 10.10 மணியளவில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ஆண்களும் ஏழு பெண்களும் அடங்குவர். அவர்களின் வயது 18 முதல் 36 வரை என மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹலிம் அபாஸ் தெரிவித்தார்.
மலாக்கா மாநில காவல்துறை தலைமையகத்தின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும், மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டன.
முதற்கட்ட விசாரணையில், இக்கும்பல் கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்திலிருந்து செயல்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது. சட்ட அமலாக்க அதிகாரிகள் எனப் போலியாக அடையாளப்படுத்திக்கொண்டு, தாய்லாந்து நாட்டவர்களைக் குறிவைத்து தொலைபேசி வாயிலாக மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இந்த மோசடிச் செயல்களில் ஈடுபட்டதற்காகச் சந்தேக நபர்களுக்கு இதுவரை சம்பளமும் வழங்கப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோதனையின்போது மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 11 மடிக்கணினிகள், பல்வேறு வகையான 11 கைப்பேசிகள் மற்றும் இணைய இணைப்பு சாதனம் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 420 மற்றும் 120B பிரிவுகளின்கீழ் விசாரிக்கப்படுகிறது.
அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகள், குறிப்பாக தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைக் கோரும் தொடர்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.



