
கோலாலம்பூர், நவம்பர் 11 – பினாங்கு மாநிலத்தை நாட்டின் முக்கிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றிய தொழில்துறை முன்னோடி டத்தோ ஸ்ரீ செட் சிங் தனது 90ஆவது வயதில் காலமானார்.
நேற்று செவ்வாய்க்கிழமை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு குறித்த தகவலை பாயான் பாரு குருத்வாரா சாஹிப் நிர்வாகம் இறுதிச்சடங்கு அறிவிப்பு மூலம் வெளியிட்டது.
பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் (PDC) முதல் பொது மேலாளராகப் பொறுப்பேற்ற செட் சிங், 1971ஆம் ஆண்டு முதல் 1991ஆம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகள் அப்பதவியில் சேவையாற்றினார்.
அவரது பணிக்காலத்தில் பினாங்கில் தொழிற்பேட்டைகள் மற்றும் புதிய குடியிருப்பு நகரங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக, பாயான் பாரு பகுதியின் வளர்ச்சிக்கும் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
அப்போது பினாங்கில் நிலவிய வேலைவாய்ப்பின்மையைச் சமாளிக்கும் நோக்கில், பன்னாட்டு நிறுவனங்களை மாநிலத்திற்கு ஈர்க்கும் முயற்சியில் அப்போதைய முதலமைச்சர் டான் ஸ்ரீ லிம் சோங் இயூவுடன் இணைந்து செயல்பட்டார்.
இதன் விளைவாக இன்டெல், ஏஎம்டி, ஹியூலெட் பேக்கார்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பினாங்கில் முதலீடுகளை மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டது. இதுவே மாநிலத்தின் மின்னணு மற்றும் மின்சார உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
மேலும், தொழில்துறைக்குத் தேவையான திறமையான பணியாளர்களை உருவாக்கும் நோக்கில் பினாங்கு திறன் மேம்பாட்டு மையம் (PSDC) உருவாக்கப்படுவதிலும் அவர் பங்களித்தார்.
ஓய்வுக்குப் பின்னரும் மாநில வளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்ட அவர், பினாங்கு அரசாங்கத்தின் சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மைண்டன் ஹைட்ஸ் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3 மணிக்கு பத்து கந்திங் தகன மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.



