
கோலாலம்பூர், நவம்பர் 11 – தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா பகுதியில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய அளவிலான தீபாவளிக் கொண்டாட்டத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (MAICCI) இணைந்து ஏற்பாடு செய்யும் இவ்விழா, காலை 9 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காலை 11 மணியளவில் வருகை தந்து, சுமார் இரண்டு மணி நேரம் பொதுமக்களுடன் கலந்துரையாடவுள்ளார். அப்போது இந்தியச் சமூகத்தினருக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக MAICCI தலைவர் டத்தோ ஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மலேசிய இந்தியச் சமூகத்தின் பாரம்பரியங்களையும் கலாசாரப் பன்முகத்தன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் ‘ருமா காமி’ எனும் சிறப்புக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இந்தியச் சமூகத்தின் பல்வேறு உப பிரிவுகளின் மரபுகள், வரலாறு மற்றும் பங்களிப்புகளைப் பார்வையாளர்கள் அறிந்துகொள்ள இது வாய்ப்பளிக்கும்.
மேலும், உள்ளூர் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு விருந்துகள், கலாசாரப் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, விலாயா பகுதியைச் சேர்ந்த 15 தமிழ்ப்பள்ளிகளின் 200 மாணவர்கள் தங்களது படைப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்கு வழங்கவுள்ளனர்.
MAICCI உறுப்பினர் அமைப்புகளும் இக்கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றன. பார்வையாளர்களின் வாகன நிறுத்த வசதிக்காக அருகிலுள்ள மூன்று பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன, சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மலேசியர்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இத்தகவல்கள் தொடர்பான அறிவிப்பு கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. இதில் MAICCI துணைத் தலைவர் டாக்டர் ஏ.டி. குமரராஜா, விக்னேஸ்வரன், லெட்சுமணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.



