Tazhal Media – தழல் மீடியா

/ Nov 11, 2026
Latest News
tms

11 நாட்களில் நான்கு முறை வெள்ளம் – கம்போங் மலாயு சுபாங் மக்கள் கடும் அவதி

சுங்கை பூலோ, நவம்பர் 11 – தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கம்போங் மலாயு சுபாங் பகுதியில் வசிக்கும் மக்கள் மீண்டும் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். கடந்த 11 நாட்களில் மட்டும் நான்கு முறை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை பெய்த மழையைத் தொடர்ந்து ஜாலான் மெர்பாவ் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. பல வீடுகளின் வளாகங்களிலும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் அப்பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இதற்கு முன்னதாக நவம்பர் மாதத் தொடக்கத்திலும் ஏற்பட்ட வெள்ளத்தில் 789 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 325 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன், வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக தற்காலிக நீர்த்தேக்கக் குளம் அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், சுங்கை பூலோ மற்றும் சுங்கை டாமான்சாரா பகுதிகளுக்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் கட்டம் கட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு சுமார் 700 மில்லியன் ரிங்கிட் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியத் திட்டங்கள் முழுமையடையும் வரை காத்திருக்காமல், இடைக்காலத் தீர்வுகளையும் விரைவுபடுத்த வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் ஏற்படும் வெள்ளத்தால் வீடுகள், வாகனங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைவதுடன், குடியிருப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யும் பணிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Scroll to Top