Tazhal Media – தழல் மீடியா

/ Nov 11, 2026
Latest News
tms

போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் விலகல்

கோலாலம்பூர், நவம்பர் 11 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உடனடியாகத் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

டிஏபி தேசிய பொதுச் செயலாளருமான அந்தோணி லோக், கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்த தனது நிலைப்பாட்டுக்கு ஏற்ப இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நஜிப் ரசாக்கின் SRC International வழக்கு தொடர்பான சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் தொடர அனுமதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 10ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தனது அமைச்சுப் பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்தோணி லோக் அறிக்கை வெளியிட்டார்.

டிசம்பர் 2022 முதல் போக்குவரத்து அமைச்சின் பொறுப்பை ஒப்படைத்து நம்பிக்கை அளித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அதேவேளையில், அமைச்சின் உயர் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் பாராட்டுகளைத் தெரிவித்த அவர், அடுத்த அமைச்சரிடம் பொறுப்புகளைச் சுமுகமாக ஒப்படைப்பதற்குத் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை அடிப்படையிலான அரச மன்னிப்பு தொடர்பாக டிஏபி தனது அதிருப்தியை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதமே அந்தோணி லோக் பதவி விலக முன்வந்திருந்தார். இருப்பினும், பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க நஜிப் வீட்டுக் காவலுக்கு மாற்றப்படும் வரை அமைச்சுப் பொறுப்பில் தொடர்ந்தார்.

நஜிப் ரசாக்கிற்கு 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அந்தோணி லோக்கின் பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Scroll to Top