Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

போலிஸ் அதிகாரி மீது கொடூரத் தாக்குதல் – வெளிநாட்டவர் துப்பாக்கிச் சூட்டில் பலி!

கோலாலம்பூர், நவம்பர் 12:கோலாலம்பூர், கெப்போங், டேசா அமான்பூரி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவர் நடத்திய வாளால் தாக்குதலில் 26 வயதுடைய போலிஸ் அதிகாரியின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டதுடன், தலை மற்றும் உடல் பகுதிகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.மாலை 4 மணியளவில், ஒருவர் வீட்டில் அட்டகாசம் செய்வதாகப் பொதுமக்களிடமிருந்து போலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலிஸார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.அப்போது வீட்டின் கதவு திறக்கப்பட்டதும், இரண்டு பெரிய வாள்களைக் கொண்டு சந்தேக நபர் போலிஸ் அதிகாரிகளைத் தாக்கியுள்ளார். இதில் கோம்பாக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தின் ரோந்து பிரிவைச் சேர்ந்த 26 வயதுடைய போலிஸ் அதிகாரியின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.தாக்குதலுக்குப் பின்னர் தப்பியோடிய சந்தேக நபர், இரவு 8 மணியளவில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவரைக் கைது செய்ய போலிஸார் முயன்றபோது, மீண்டும் வாளால் தாக்க முற்பட்டதால் தற்காப்பு நடவடிக்கையாக போலிஸார் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதற்கிடையில், காயமடைந்த போலிஸ் அதிகாரி முதலில் செலாயாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

துண்டிக்கப்பட்ட கையை மீண்டும் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சீரான நிலையில் இருப்பதாகச் சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

Scroll to Top