Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

2027 தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி: கராத்தேவில் 18 பிரிவுகள் – அனைத்து நாடுகளுக்கும் சம வாய்ப்பு!

கோலாலம்பூர், நவம்பர் 12:2027ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் (Sukan SEA), கராத்தே விளையாட்டில் மொத்தம் 18 பிரிவுகள் இடம்பெறவுள்ளதாக தென்கிழக்கு ஆசிய கராத்தே சம்மேளனத்தின் (MAKAF) தலைவர் டத்தோ நூர் அஸ்மி அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

இதில், கலப்பு அணிகளுக்கான குமித்தே (Mixed Team Kumite) என்ற புதிய போட்டிப் பிரிவும் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.தலைநகரில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், ஆசியான் நாடுகளின் கராத்தே பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு இந்த முடிவை ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக நூர் அஸ்மி தெரிவித்துள்ளார்.

உலக கராத்தே சம்மேளனத்தால் (WKF) அங்கீகரிக்கப்பட்ட புதிய போட்டிப் பிரிவு உட்பட, மொத்தம் 18 பிரிவுகளிலும் அனைத்து ஆசியான் நாடுகளும் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், எந்தவொரு நாட்டுக்கும் கூடுதல் சாதகமான சூழல் ஏற்படாமல், அனைத்து நாடுகளுக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதற்கு முன்னதாக, 2027 Sukan SEA போட்டியில் கராத்தே அணி குறைந்தது ஆறு தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என MAKAF இலக்கு நிர்ணயித்திருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு மலேசியா Sukan SEA போட்டியை ஏற்று நடத்தியபோது, கராத்தே அணியினர் 16 போட்டிப் பிரிவுகளில் பங்கேற்று ஏழு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருந்தனர்.

Scroll to Top