
கோலாலம்பூர், நவம்பர் 12 – மலேசியாவில் பொருள் மற்றும் சேவை வரியான (ஜிஎஸ்டி) GST முறையை மீண்டும் அறிமுகப்படுத்தினால், குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் மக்களே அதிக பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மக்களின் தற்போதைய வருமான நிலை உயராத சூழலில், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் ஜிஎஸ்டி வரியை மீண்டும் அமல்படுத்துவது பொருத்தமான முடிவாக இருக்காது என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், ஜிஎஸ்டி வரி பொதுமக்களின் அன்றாடச் செலவுகளையும் வாழ்க்கைச் செலவினத்தையும் அதிகரிக்கக்கூடும் என்றார்.
தற்போது நடைமுறையில் உள்ள விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) முறையை மேம்படுத்துவதற்கும், தொழில்துறையினர் எழுப்பியுள்ள இரட்டை வரிவிதிப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது சுமார் 7 இலட்சம் வர்த்தக நிறுவனங்கள் அதன் கீழ் வந்ததாகவும், தற்போதைய எஸ்எஸ்டி முறையில் சுமார் 1.3 இலட்சம் நிறுவனங்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
மேலும், மக்களின் வருமானம் குறைந்தபட்சம் 4,000 ரிங்கிட்டை எட்டும் நிலை உருவானால் மட்டுமே ஜிஎஸ்டி அமலாக்கம் குறித்து பரிசீலிப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டுவருவதற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாடு அரசியல் நோக்கத்திலானது அல்ல; மக்களின் நலனையும் பொருளாதாரச் சூழலையும் கருத்தில் கொண்ட முடிவு என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.



