Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

அச்சுறுத்தல் ஏற்பட்டால் தயக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்துங்கள் – கோலாலம்பூர் காவல் தலைவர்

கோலாலம்பூர், நவம்பர் 12 – பணியின்போது உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் காவல்துறை உறுப்பினர்கள், தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தத் தயங்கக் கூடாது என்று கோலாலம்பூர் காவல் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கெப்போங், தேசா அமான்பூரி பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில் காவல்துறை உறுப்பினர் ஒருவரின் வலது மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

கோலாலம்பூர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் பேசிய ஃபாடில், முன்னணிப் பணியாளர்கள் எப்போதும் விழிப்புடனும், எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

துப்பாக்கியைக் கையாளும் பயிற்சியுடன், ஆபத்தான சூழ்நிலைகளில் விரைந்து முடிவெடுக்கும் திறனும் காவலர்களுக்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். அச்சுறுத்தல் அல்லது ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் நடவடிக்கை எடுக்கத் தாமதிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், 26 வயதுடைய லான்ஸ் கோப்ரல் பதவியிலான காவலர், தாக்குதலில் வலது மணிக்கட்டை இழந்ததுடன் தலை மற்றும் உடலிலும் காயமடைந்தார். அவருக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட கை மீண்டும் பொருத்தப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஷஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டு ஆடவர், பின்னர் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காவல்துறையினரை மீண்டும் தாக்க முயன்றபோது, தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

Scroll to Top