
உலு சிலாங்கூர், நவம்பர் 12 – சிலாங்கூர் மாநிலம், குவாலா குபு பாரு அருகேயுள்ள சுங்கை பெர்தாக் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் மேலும் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளதுடன், மேலும் இருவர் தொடர்ந்து காணாமல் போயுள்ளனர்.
சுங்கை லூயிட் பகுதியில் உள்ள பெர்தாக் ஆற்றங்கரை முகாம் அருகே கடந்த திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் எட்டு ஆண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இன்று காலை சுமார் 10.15 மணியளவில் சிலாங்கூர் ஆற்றின் அணைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம், காணாமல் போனவர்களில் ஒருவருடையது என சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு துணை இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.
இதுவரை மீட்கப்பட்ட ஆறு பேரில் ஒருவர் மலேசியர்; ஏனைய ஐவர் வெளிநாட்டினர். எஞ்சிய இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தேடுதல் நடவடிக்கையின்போது குறிப்பிட்ட பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது. எனினும், ஆற்றில் நீர்மட்டம் வழக்கத்தைவிட சுமார் இரண்டு மீட்டர் உயரமாக இருந்ததால், சில பகுதிகளை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்றைய தேடுதல் நடவடிக்கையில் நீர்மூழ்கி மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர், தன்னார்வத் தீயணைப்புப் படையினர் மற்றும் குடிமைத் தற்காப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஐந்து படகுகளும் ஆளில்லா விமானங்களும் தேடுதல் பணிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மொத்தம் 34 பேர் கொண்ட நான்கு குழுக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.



