Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

பயிற்சியின்போது மாரடைப்பு: 22 வயது பிரான்ஸ் கால்பந்து வீரர் உயிரிழப்பு

பிரான்ஸ், நவம்பர் 12 – பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் சரிந்த 22 வயது பிரான்ஸ் கால்பந்து வீரர் வானிஸ் ஹொன்சோர் உயிரிழந்தார்.

செயின்ட்-டெனிஸ் எஃப்சி (Saint-Denis FC) அணிக்காக விளையாடி வந்த அவர், புதன்கிழமை (நவம்பர் 11) ரீயூனியன் தீவில் உள்ள ஜமைக்கா விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கு விரைந்த மருத்துவக் குழுவினர், அவரைக் காப்பாற்ற சுமார் 45 நிமிடங்கள் இதய-நுரையீரல் மீட்பு சிகிச்சை (CPR) மேற்கொண்டனர். எனினும், சிகிச்சை பலனளிக்காததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அண்மையில்தான் திருமணமான ஹொன்சோரின் திடீர் மரணம், செயின்ட்-டெனிஸ் எஃப்சி அணியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழப்பு தங்களை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளதாகக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

லே அவ்ரே நகரில் பிறந்த ஹொன்சோர், எஃப்சி ரூவான் அணியின் இளையோர் பிரிவில் பயிற்சி பெற்றவர். 2023–2024 பருவத்தில் அந்த அணியின் முதன்மை அணிக்காக மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு கோலையும் அடித்துள்ளார். பின்னர் பல்வேறு பிரான்ஸ் கழகங்களில் விளையாடிய அவர், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் செயின்ட்-டெனிஸ் எஃப்சியில் இணைந்தார்.

பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம், ரீயூனியன் கால்பந்து லீக் உள்ளிட்ட அமைப்புகளும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

Scroll to Top