Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

நிபந்தனைகளை மீறினால் நஜிப் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் – சைஃபுதீன்

கோலாலம்பூர், நவம்பர் 12 – வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் உடனடியாக மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், நிபந்தனைகளை மீறுபவரின் வீட்டுக் காவல் அனுமதி உடனடியாக ரத்து செய்யப்பட்டு, காஜாங் சிறைச்சாலை அல்லது சிறைத்துறை தலைமை ஆணையர் தீர்மானிக்கும் வேறு சிறைச்சாலைக்கு அனுப்பப்படலாம் என்றார்.

நஜிப்பின் வீட்டுக் காவலுக்காக நான்கு முக்கிய பிரிவுகளின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். அவை தங்குமிடம் மற்றும் உடன் வசிப்பவர்கள் தொடர்பான கட்டுப்பாடுகள், நடமாட்டம் மற்றும் பார்வையாளர்கள் மீதான கண்காணிப்பு, தொலைபேசி மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் பயன்பாடு, அத்துடன் மறுவாழ்வு மற்றும் தலையீட்டுத் திட்டங்களில் பங்கேற்பது ஆகியவையாகும்.

நஜிப் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், வேறு நபர்கள் அவருடன் தங்குவதற்கு முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். அதேபோல், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கும் அனுமதி அவசியம்.

மேலும், ஊடகங்களிடம் கருத்து தெரிவிப்பது, சமூக ஊடகங்களில் பதிவிடுவது, பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய ஆறு ஆண்டு சிறைத்தண்டனையை நஜிப், 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவித்து வருகிறார்.

Scroll to Top