Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

நஜிப் வீட்டுக் காவலுக்கு எதிரான வழக்கறிஞர் மன்றத்தின் மனுவை எதிர்க்கும் அரசுத் தரப்பு

கோலாலம்பூர், நவம்பர் 12 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுக் காவல் உத்தரவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தாக்கல் செய்துள்ள நீதித்துறை மறுஆய்வு மனுவை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) எதிர்த்துள்ளது.

நஜிப்பின் வீட்டுக் காவல் ஏற்பாடு தொடர்பான முடிவைச் சவாலுக்கு உட்படுத்தி, மலேசிய வழக்கறிஞர் மன்றம் நவம்பர் 10ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனுவில், கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம், பிரதமர் அலுவலகத்தின் சட்ட விவகாரங்கள் மற்றும் நிறுவனச் சீர்திருத்தப் பிரிவு அமைச்சர், மலேசிய சிறைச்சாலைத் துறை ஆணையர் நாயகம் மற்றும் நஜிப் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட வீட்டுக் காவல் ஏற்பாடு கூட்டரசு அரசியலமைப்புக்கு முரணானது என்றும், மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தின் கீழ் சிறைத்தண்டனையை வீட்டுக் காவலாக மாற்றுவதற்கு சட்டத்தில் உரிய ஏற்பாடு இல்லை என்றும் வழக்கறிஞர் மன்றம் தனது மனுவில் வாதிட்டுள்ளது.

மேலும், அந்த ஏற்பாட்டைச் சட்டவிரோதமானதாக அறிவித்து ரத்து செய்யவும், வழக்கு முடிவடையும் வரை வீட்டுக் காவலை இடைநிறுத்தவும் அனுமதி கோரியுள்ளது.

இதற்கிடையில், வழக்கறிஞர் மன்றத்தின் மனுவை எதிர்த்து AGC தனது ஆட்சேபனையை முன்வைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க நஜிப்பிற்கு நவம்பர் 10ஆம் தேதி நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

Scroll to Top