Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

அபுதாபி ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் தாக்குதல்: உஸ்மான் நூர்மகோமெடோவ் மீது மெராப் குற்றச்சாட்டு

அபுதாபி, நவம்பர் 12 – கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியின் (MMA) முன்னணி வீரரான மெராப் ட்வாலிஷ்விலி, அபுதாபியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வரவேற்புப் பகுதியில் தாம் உஸ்மான் நூர்மகோமெடோவ் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினரால் தாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரியல் அமெரிக்கன் ஃப்ரீஸ்டைல் (RAF) போட்டிக்கான விளம்பர நேர்காணலில் ஈடுபட்டிருந்தபோது, உஸ்மான் உள்ளிட்டோர் பின்னால் இருந்து வந்து தம்மையும் தம்முடன் இருந்த நண்பரையும் தாக்கியதாக மெராப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் இணையத்தில் பரவி வருகின்றன. அதில், நேர்காணல் வழங்கிக்கொண்டிருந்த மெராப்பை ஒரு குழுவினர் நெருங்குவதும், அதைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்படுவதும் பதிவாகியுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் வெளியிட்ட காணொளியில், முகத்தில் ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட மெராப், பாதுகாப்புப் பணியாளர்கள் தம்மைக் கட்டுப்படுத்தியபோதும், கீழே விழுந்த தங்களைக் குழுவினர் தொடர்ந்து தாக்கியதாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உஸ்மானோ அவரது தரப்பினரோ இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை. இதற்கிடையில், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அபுதாபி காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உஸ்மான் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

மெராப், வரும் சனிக்கிழமை அபுதாபியில் நடைபெறவுள்ள RAF போட்டியில் மார்லன் மொரேஸை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். காயங்கள் காரணமாக அவர் போட்டியில் பங்கேற்பாரா என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக, 2025ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற UFC போட்டியில் உஸ்மானின் சகோதரர் உமர் நூர்மகோமெடோவை மெராப் தோற்கடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாகப் போட்டி மனப்பான்மை நிலவி வருகிறது.

Scroll to Top