
மலாக்கா, நவம்பர் 12 – மலாக்கா மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மீண்டும் ஆட்சியமைத்தால், நியமனம் செய்யப்படும் ஏழு சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையும் ரத்து செய்து, அதனால் கிடைக்கும் நிதியை இளைஞர்களின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போவதாக பிஎச் மலாக்கா தலைவர் அட்லி சஹாரி தெரிவித்துள்ளார்.
நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்காகச் செலவிடப்படும் தொகையைச் சேமித்து, இளைஞர்கள் சொந்த வீடு வாங்குவதற்கான உதவிகளுக்கும், இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்குவதற்கும் ஒதுக்குவதே தங்களது திட்டம் என அவர் கூறினார்.
மேலும், மலாக்கா முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான செரி பெண்டஹாராவை மீண்டும் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறியும் இடமாகத் திறக்கவும் பிஎச் விரும்புவதாக அட்லி தெரிவித்தார்.
இதன்படி, வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்கள் முதலமைச்சரைச் சந்தித்து தங்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என அவர் விளக்கினார்.
மக்கள் தங்களது பிரச்சினைகளை மாநிலத்தின் உயர்மட்டத் தலைமையிடம் நேரடியாக எடுத்துச் செல்லும் வாய்ப்பு அவசியம் என்றும், இதுபோன்ற சந்திப்புகள் மூலம் பல பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் பிஎச் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், இந்த இரு திட்டங்களும் செயல்படுத்தப்படும் என அட்லி உறுதியளித்தார்.



