
மதுரை, நவம்பர் 12 – தமிழகத்தின் மதுரை காளவாசல் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், அதிகாலை நேரத்தில் மாடி வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர் சுமார் 35 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்ட இந்தக் கடையில், புதன்கிழமை இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்து கடை மூடப்பட்டது.
வியாழக்கிழமை காலை ஊழியர்கள் கடையைத் திறந்தபோது நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.காவல்துறையினர் ஆய்வு செய்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளின்படி, முகமூடி அணிந்த நபர் அதிகாலை சுமார் 3 மணியளவில் கட்டடத்தின் மேல்தளத்தை அடைந்துள்ளார். அங்கிருந்து கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஏணிகள் மற்றும் அமைப்புகளின் உதவியுடன், லிப்ட் செல்லும் பாதை வழியாகக் கடைக்குள் இறங்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடையின் பூட்டுகள் உடைக்கப்படாமலும், சுவர்களில் துளையிடப்படாமலும் இந்தக் கொள்ளை நடந்துள்ளது விசாரணையில் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது.கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் அளவு சுமார் 35 கிலோ எனக் கூறப்படுகிறது. அவற்றின் மதிப்பு ரூ.50 கோடி வரை இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இறுதித் தொகை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.மதுரை மாநகரக் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக அருகிலுள்ள பகுதிகளின் கண்காணிப்புக் கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.



