Tazhal Media – தழல் மீடியா

/ Nov 12, 2026
Latest News
tms

சிலாங்கூர் வெள்ளப் பாதிப்பு: பேரிடர் ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்குப் பிரதமர் அன்வார் தலைமை

சிலாங்கூர், நவம்பர் 12 – மாநிலத்தில் தொடரும் வெள்ளப் பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் சிலாங்கூருக்கான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை விரைந்து வழங்குவதுடன், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.முன்னதாக, கம்போங் மலாயு சுபாங் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, சுங்கை பூலோ மற்றும் சுங்கை டாமான்சாரா ஆறுகள் தொடர்பான வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் திட்டங்களில் ஆறுகளை அகலப்படுத்துதல், ஆற்றுப் படுகைகளைத் தூர்வாருதல், கூடுதல் நீர்த்தேக்கக் குளங்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இடம்பெறுகின்றன. இத்திட்டங்களுக்காக மத்திய அரசாங்கம் ஏறத்தாழ 700 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்குவது தொடர்பாகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தகுதியுடைய பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தலைவர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 2,500 ரிங்கிட் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்கான திட்டங்கள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

Scroll to Top