Tazhal Media – தழல் மீடியா

/ Nov 13, 2026
Latest News
tms

திடீரென செயலிழந்த மைக்ரோசாப்ட் சேவையகங்கள்! உலகளவில் Microsoft 365, Outlook, Teams சேவைகளில் பாதிப்பு

இஸ்தான்புல், நவம்பர் 13 – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Microsoft 365 சேவைகளில் ஏற்பட்ட திடீர் முடக்கம், பல ஆயிரக்கணக்கான பயனர்களின் அன்றாடப் பணிகளைப் பாதித்துள்ளது. இந்தத் தடங்கலுக்கு பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்தது காரணமல்ல; திடீரென செயலிழந்த சில சேவையகங்களே காரணம் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ஏற்பட்ட இந்தப் பிரச்சினையால் Outlook மின்னஞ்சல் சேவை, Exchange Online மற்றும் Microsoft 365 உடன் தொடர்புடைய சில பயன்பாடுகளை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். Microsoft Teams சேவையிலும் இணைப்புச் சிக்கல்கள் பதிவாகின.மைக்ரோசாப்ட் 365 சேவை நிலவரப் பக்கத்தில் வெளியிட்ட விளக்கத்தின்படி, சில சேவையகங்கள் எதிர்பாராதவிதமாகச் செயலிழந்ததால், தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்த மற்ற சேவையகங்கள் மீது கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.

இதனைச் சரிசெய்யும் நடவடிக்கையாக, புதிய கணினி அமைப்புகளைச் செயல்படுத்துவதை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சேவையகங்களுக்குச் செல்லும் இணையப் போக்குவரத்து மாற்றுப் பாதைகளுக்கு திருப்பிவிடப்பட்டதுடன், செயலிழந்த சேவையகங்களை மறுதொடக்கம் செய்யும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

அமெரிக்காவில் மட்டும் Outlook தொடர்பாக 97,000-க்கும் அதிகமான புகார்களும், Microsoft 365 தொடர்பாக 38,000-க்கும் அதிகமான புகார்களும், Teams தொடர்பாக சுமார் 4,500 புகார்களும் Downdetector தளத்தில் பதிவாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட சேவைகளைப் படிப்படியாக மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பயனர்கள் சேவை நிலவரப் பக்கத்தின் மூலம் சமீபத்திய அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

Scroll to Top