
கோலாலம்பூர், நவம்பர் 13 – உலகின் செல்வாக்குமிக்க 500 முஸ்லிம்கள் பட்டியலின் 2027ஆம் ஆண்டு பதிப்பில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.ஜோர்டானைத் தளமாகக் கொண்டு இயங்கும் ராயல் இஸ்லாமிக் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் சென்டர் (RISSC) வெளியிட்டுள்ள The Muslim 500: The World’s 500 Most Influential Muslims என்ற வருடாந்திர வெளியீட்டின் 18ஆவது பதிப்பில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அன்வாரின் தலைமையிலான மலேசியாவின் பொருளாதார மற்றும் டிஜிட்டல் மாற்ற முயற்சிகள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி தொழில்நுட்பம், தரவு மையங்கள், மேகக் கணினி மற்றும் எரிசக்தி மாற்றம் ஆகிய துறைகளில் அரசாங்கம் செலுத்தும் கவனம் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்காசியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்கான அவரது இராஜதந்திர முயற்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லைப் பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்துவதில் மலேசியா ஆற்றிய பங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பாலஸ்தீன மக்களின் உரிமைகள், காசா மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அரங்கில் அன்வார் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் இந்த வெளியீட்டில் இடம்பெற்றுள்ளது.அரசியல் பயணத்திற்கு முன்பாக 1971ஆம் ஆண்டு மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கமான ஏபிஐஎம் அமைப்பை நிறுவி அதன் தலைவராகப் பணியாற்றிய அவரது ஆரம்பகால சமூகப் பங்களிப்புகளும், ஆக்ஸ்போர்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மற்றும் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகங்களில் மேற்கொண்ட கல்விசார் பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தை சவூதி அரேபிய மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீர் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ 16ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.



