
மலாக்கா, நவம்பர் 13 – போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தாலும், அதனைத் தாம் இன்னும் ஏற்கவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து அவருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 12ஆம் தேதி மலாக்கா, புக்கிட் பாருவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் இறுதிப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அன்வார், அந்தோணி லோக் தற்காலிகமாக விடுமுறை எடுத்துக்கொள்வதில் பிரச்சினையில்லை என்றும், ஆனால் பதவி விலகல் குறித்து மீண்டும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.அந்தோணி லோக் நேர்மையானவராகவும், பொறுப்புணர்வுடன் பணியாற்றும் அமைச்சராகவும் இருப்பதாகப் பாராட்டிய பிரதமர், போக்குவரத்து அமைச்சின் மூலம் பொதுமக்களுக்கும் டாக்சி ஓட்டுநர்களுக்கும் பயனளிக்கும் பல்வேறு திட்டங்களையும் முயற்சிகளையும் அவர் முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், அமைச்சக அதிகாரிகளிடையேயும் அந்தோணி லோக்கிற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக அன்வார் தெரிவித்தார். சிறப்பாகப் பணியாற்றும் அமைச்சர்கள் பதவி விலகுமாறு வலியுறுத்தப்படுவதையும் அவர் தனது உரையில் கேள்விக்குட்படுத்தினார்.முன்னதாக, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நவம்பர் 10ஆம் தேதி அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் தனது ராஜினாமாவை ஏற்காததால், அந்தோணி லோக்கின் அமைச்சரவைப் பதவி தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.



