
கோலாலம்பூர், நவம்பர் 14 – அரசியல் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இன ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற சில தரப்பினரின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மலேசியாவின் பன்முகச் சமூக அடையாளத்தையும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் பாதுகாத்து, அனைத்து இன மக்களுக்கும் சமமான நீதி, நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்டத்தில் உரையாற்றிய அவர், அரசியல் ரீதியாகத் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமானால் மலாய் இன ஆதிக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசியக் கொள்கைகளை மாற்ற வேண்டும் என்று தமக்கு அறிவுறுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார்.ஆனால், மலேசியாவை நேசிக்கும் தலைவராகத் தொடர்ந்து செயல்பட விரும்புவதாகவும், நாட்டின் அரசமைப்புச் சட்டக் கொள்கைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அன்வார் தெரிவித்தார்.
அதேவேளையில், மலாய் மொழியின் தேசிய மொழி அந்தஸ்து, இஸ்லாத்தின் கூட்டரசு மத அந்தஸ்து மற்றும் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமைகள் ஆகியவை கேள்விக்குட்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.இனத்தின் உயிர்வாழ்வு மற்றும் உரிமைகள் என்ற பெயரில் பிரசாரம் செய்யும் சில அரசியல் தலைவர்கள், உண்மையில் தங்களது சொந்த மற்றும் குடும்பச் செல்வத்தைப் பெருக்குவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இன உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் மோசடி மற்றும் ஊழல் விவகாரங்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சிகளையும் அன்வார் சாடினார்.மேலும், தீபாவளி உணர்த்தும் இருளை அகற்றி ஒளியை நிலைநாட்டும் தத்துவம் அனைத்து இன, மத மக்களுக்கும் பொருந்தும் என்றும், மனிதநேயம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவையே நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
திருக்குறள் உள்ளிட்ட பல்வேறு மதங்களின் அறநெறிகளும் மனிதநேயம் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.



